பொலிஸ் நிலையத்தின் மின்சாரத்தை துண்டித்து, கூண்டிலிருந்து தப்பிச் சென்றவர், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அலுவலகம் நடத்தி பெரும் தொகை பணத்துடன் மாயமாகியுள்ளார்.
திருடர்கள் பல விதம். சில திருடர்கள் மாத்திரமே திருட்டு கலையில் தேர்ந்தவர்கள். பொலிசாருக்கு கண்ணில் விரலை விட்டு ஆட்டி... பொதுமக்களை தலைசுற்ற வைத்து, தொடர் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். அப்படியான ஒருவரையே தற்போது பொலிசார் தேடி வருகிறார்கள். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட அலுவலக வளாகத்திற்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வந்த இருவர் கொடுத்த 45 மில்லியன் ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற நபர், இதற்கு முன்னரும் பல தடவைகள் காவலில் இருந்து தப்பி ஓடியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு வைத்தியராக ஆள்மாறாட்டம் செய்தமைக்காகவும், வாகனத் திருட்டுக்காகவும் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவர் இவரே என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2009 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்ட பின்னர் பொரளை பொலிஸ் நிலைய அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், பொலிஸ் நிலையத்தில் மின்சார இணைப்பை துண்டித்து விட்டு, காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். 2009 ஆம் ஆண்டு அவர் தப்பிச் செல்லும் முயற்சிக்கு காவல் நிலையத்தில் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் உதவினார். குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்தவரின் உதவியுடன் உலோகம் வெட்டும் கருவியை பெற்றுக் கொண்டு, அதனைக் கொண்டு செல்லின் இரும்பு கம்பிகளை அறுத்துவிட்டு, மின்சாரத்தை துண்டித்து விட்டு, இருட்டில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நபர் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், பூட்டுகளை வெட்டுவது மற்றும் திறப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் என்றும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொரளை பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் பின்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். ஆனால் குறுகிய காலத்தில் சிறைக்காவலர் ஒருவரின் உதவியை பெற்று, சிறையிலிருந்தும் தப்பிச் சென்றுள்ளார். சிறையிலிருந்து தப்பியோடிய இந்த நபர், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இடம்பெற்ற நான்கு கோடியே ஐம்பத்தைந்து இலட்சம் ரூபா பண மோசடியுடன் மீண்டும் தோன்றியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் திகதி இந்த மோசடி நடந்தது. பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த நபருக்கு நிரந்தர வசிப்பிடம் இல்லை, அவரது பெயர் ரஃபிக் முகமது ஷெரீப் என்றாலும், அவர் தனது மோசடி நடவடிக்கைகளுக்கு மைக்கேல், ரீவ்ஸ் போன்ற பல பெயர்களைப் பயன்படுத்துகிறார். சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர் சரளமாக பேசக்கூடியவர் எனவும், பயணத்திற்காக ஜீப் வண்டிகளை பயன்படுத்தியதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் பயணிக்கும் சமயங்களில் வாகனத்தின் கண்ணாடியில் பாதுகாப்பு அமைச்சு என்ற பலகையை அவர் பொருத்தியிருந்ததாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் பயணித்த வாகனங்களை தடுத்து நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள், தாம் பாதுகாப்பு அமைச்சில் இருந்து வருகிறேன் என ஆங்கிலத்தில் அவர் தொடர்ந்து பேசியதையடுத்து பொலிஸ் அதிகாரிகளும் பதற்றமடைந்து அவரை சோதனை செய்யாமல் சென்று விட்டனர். இஸ்லாமியரான இவர் பல இடங்களில் சிங்களவராக தோன்றியுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் பதுளையில் உள்ள முகவரியில் இருந்து சிங்களவர் என போலி தேசிய அடையாள அட்டை தயாரித்து இரண்டு அலுவலகங்களை வாடகைக்கு எடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் போன்று நடித்து கார் ஒன்றை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விளைவால் பொரளை பொலிஸாரால் குறித்த நபர் அப்போது கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணிபுரியும் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரின் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி தேசிய அடையாள அட்டையுடன் இந்த நபர் ஆஜராகியுள்ளார். வாகன விற்பனை தொடர்பாக நாளிதழ்களில் வெளியாகும் விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையுயர்ந்த வாகனங்களை அதிக கவனம் செலுத்தும் இவர், தன்னை ஒரு வைத்தியராக குறிப்பிட்டு, வாகனத்தை வாங்கப் போவதாக தொடர்பு கொள்வார். வெளியிடமொன்றில் சந்தித்து வாகனங்களை பரிசோதிக்கும் போர்வையில் அதன் சாவியை சோப் கட்டியில் அழுத்தி நகல் எடுத்து கொள்வதாகவும், பின்னர் போலி சாவியை தயார் செய்து, வாகனத்தை கொள்ளையடிப்பதாகவும் தெரிய வந்தது. போலி சாவியை தயாரித்த பின்னர், இந்த நபர் வாகனத்தின் உரிமையாளருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு அனைத்து ஆவணங்களுடன் வாகனத்தை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறு உரிமையாளருக்குத் தெரிவிக்கிறார். வைத்தியசாலை வாகன தரிப்பிடத்தில் காரை நிறுத்தி விட்டு, தன்னை சந்திக்க அறுவைச் சிகிச்சை அறைக்கு வருமாறு வாகன உரிமையாளருக்கு கூறியுள்ளார். இதன்படி, வாகன உரிமையாளர் வைத்தியசாலை வாகன தரிப்பிடத்தில் காரை நிறுத்தி விட்டு, வைத்தியசாலை சத்திர சிகிச்சைக்கூடத்துக்கு சென்றுள்ளார். வாகன தரிப்பிடத்துக்கு அருகில் மறைந்திருந்த சந்தேகநபர், உரிமையாளர் வைத்தியசாலைக்குள் நுழைந்ததும், போலி சாவியின் மூலம் காரை கொள்ளையடித்து சென்றதாக பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறாக, கொழும்பில் உள்ள வைத்தியசாலைகளிலும் அதனைச் சூழவுள்ள வைத்தியசாலைகளிலும் இந்த நபர் பல வாகனங்களை பல வைத்தியர்களின் பெயர்களில் கடத்தியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபர் பெரும்பாலும் வைத்தியர் போன்று நடித்தலும், பொறியியலாளர், ஆசிரியர், வர்த்தகர் என பல்வேறு போர்வையிலும மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 2021 ஏப்ரலில், குற்றவியல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இவரைக் கைது செய்ய வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் ஊடகங்கள் மூலம் அறிவித்தது. ஆனால், அவரைக் கைது செய்வதற்கான எந்தத் தகவலும் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கவில்லை.
பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
Leave Comments